• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரிப்பு

இலங்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் இது குறித்து பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு நாட்டின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, பேஸ்புக் மற்றும் வட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக  கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக தேசிய மற்றும் மத ரீதியான பண்டிகைக்காலங்களை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றதாகவும் இதற்காக பிரபலமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பல வர்த்தக நாமங்களும் போலியாக பயன்படுத்தப்படுகின்றதாகவும் குறித்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, அறியாத நபர்களினால் அனுப்பப்படுகின்றன குறுஞ்செய்திகளில் காணப்படும் லிங்கை மக்கள் க்ளிக் செய்வதன் மூலம், இணைய மோசடிக்காரர்கள் மக்களின் தனிப்பட்ட விபரங்களைக் களவாடுவதாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவற்றைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபடுவதுடன் சில தரப்பினர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அல்லது பரிசுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் கூறி அவற்றைப் பெற்றுக்கொள்ள ஒருதொகை பணத்தை வைப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தி நிதி மோசடி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கின்ற இவ்வாறான குறுஞ்செய்திகளை திறப்பதற்கு முன்னர், அவர்கள் குறிப்பிடுகின்ற நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்த்திற்கு பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் ஊடாக தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளுமாறும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply