• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அல்லு அர்ஜுனிடம் மீண்டும் விசாரிக்க முடிவு - 5 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை

சினிமா

ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்க்கச் சென்று ரேவதி என்ற ரசிகை நெரிசலில் சிக்கி பலியானார்.அவருடைய மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் தியேட்டர் உரிமையாளர் நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஆஜராகும்படி சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பினர்.

அதன்படி அவர் காலை 11 மணிக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 3.40 மணி நேரத்தில் 20 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் 15 கேள்விகளுக்கு அல்லு அர்ஜுன் விரிவான பதிலளித்தார். மேலும் 5 கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தேவைப்பட்டால் மீண்டும் அல்லு அர்ஜுனை விசாரிப்போம். அவர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம். அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுனும் இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது அழைத்தாலும் வர தயாராக இருக்கிறேன். போலீசாருக்கு முழுஒத்துழைப்பை அளிப்பேன் என தெரிவித்தார்.

சம்பவத்தின் போது பவுன்சர்கள் குழுவை வழி நடத்திய அந்தோணி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது ஒரு புறம் இருக்க புஷ்பா-2 பட விவகாரம் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரபு ரெட்டி கூறுகையில்:-

அல்லு அர்ஜுன் ஆந்திராவைச் சேர்ந்தவர். இங்கு பிழைப்புக்காக வாழ வந்தவர். அவர் முதல் மந்திரியை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து முதல் மந்திரி குறித்து கருத்து தெரிவித்தால் அவருடைய படங்கள் தெலுங்கானாவில் ஓட அனுமதிக்க படாது என எச்சரிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் எம்.எல்.சி சிந்தபாண்டு நவீன் என்பவர் ரச்சகுண்டா போலீசில் புஷ்பா 2 சினிமா குறித்து பரபரப்பு புகார் அளித்தார்.

அதில் புஷ்பா-2 படத்தில் சில காட்சிகள் போலீஸ் அதிகாரிகளை அவமரியாதை செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply