அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்
இலங்கை
இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதன்படி, இன்று முதல் அரிசி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அரச வர்த்தக பல்வேறு சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று (25) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.