ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள்
இலங்கை
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.
2004 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நாளில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை கண்சிமிட்டும் நொடியில் சுனாமி அலைகள் தாக்கிச் சென்றது.
இலங்கையில் மாத்திரம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்களை காவு கொண்டதுடன் பல்லாயிரம் கோடி பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்தி கண்ணீர் சிந்தியதையும் மறந்துவிட முடியாது.
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை அண்மித்துள்ள தீவுகளில் 2 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அழிந்தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிராமங்களை இழந்தது.. அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாக போய்விட்டன.
சுனாமி ஏற்பட்டு 20 வருடங்கள் கடந்திருக்கின்றது. ஆனால் அதன் வடுக்களிலிருந்து இன்னும் இலங்கையின் சில பகுதிகள் மீளாத நிலையில் உள்ளது.
சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் இன்று ஆசியாவின் பல நாடுகள் தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும் என்று இயற்பியல் வல்லுநர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்து போனது. அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்.
உலகில் சுனாமி, பூகம்பம், புயல், மழை வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல அனர்த்தங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் விலங்கினங்கள் தப்பிக்கொள்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவை அனைத்தும் மனிதனை தூய்மைப்படுத்தவும், சிந்திக்கவும் வைத்தது.
சுனாமி பேரலை தாக்கி 20 வருடங்கள் கழியும் நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதே மனிதர்கள் அதிலிருந்து ஓரளவு தம்மை தற்காத்துக் கொள்ள சிறந்த வழி ஒன்றாகும். வெறுமனே நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி ஒவ்வொரு வருடமும் இழந்த உயிர்கள், உடமைகளை நினைத்து அழுது புலம்பி புரள்வதில் எவ்வித பயனும் மக்களுக்கு ஏற்பட விடப்போவதில்லை.