ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு துணை பாடகி காரணமா? மௌனம் கலைத்த வக்கீல்
சினிமா
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார். இதன் மூலம் 29 வருட திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.
இதனை தொடர்ந்து முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பு வெளியான அன்றே அவரிடம் பல வருடங்களாக துணை பாடகியாக பணியாற்றும் மோகினி டேவும், தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இதனால் ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மை அல்ல என்று ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா கூறியுள்ளார். மேலும், சாய்ராவும், ஏ.ஆர்.ரகுமானும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். அது ஒரு இணக்கமான விவாகரத்து. இருவரும் மிகவும் உண்மையானவர்கள். இந்த முடிவை எளிதாக எடுக்கப்படவில்லை என்று கூறினார்.