அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் தீர்வுவை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் குழு
இலங்கை
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி 15,800 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் கற்பிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மற்றும் நிர்வாகப் பணிகள் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்து, பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான நிலையான தீர்வுகளை முன்வைப்பதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
1994 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 07 சந்தர்ப்பங்களில் பல்வேறு திட்டங்களின் ஊடாக அரசாங்க சேவைக்கு உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 150,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பணிபுரிகின்றனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய சேவைப் பிரிவுகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் திறமை மற்றும் தொழில் தகைமைகளை உரிய மதிப்பீடு செய்யாமல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
மேலும் இவர்களுக்கு முறையான பதவியேற்பு மற்றும் பணியிடை பயிற்சி வழங்காததாலும், பதவி தொடர்பான பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக வழங்காததாலும், அந்த அதிகாரிகளிடம் எதிர்பார்த்த செயல்திறனை அடைய முடியவில்லை என அமைச்சர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டார்