• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நன்றி தெரிவித்தார் சபாநாயகர் அசோக ரன்வல

இலங்கை

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல  நன்றி தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில்  ஆரம்பமாகியிருந்த நிலையில் சபையின் முதலாவது அமர்வில் முதலாவது நிகழ்வாக சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல  தெரிவு செய்யப்பட்டார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரன்வலவின் பெயரை முன்மொழிந்ததோடு அதனை வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். அதன்படி, சபாநாயகராக அசோக ரன்வல ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில்  சபாநாயகர் பதவிக்குத் தன்னைத் தெரிவுசெய்தமை குறித்து நன்றி தெரிவித்த அவர்  நாட்டின் அதியுயர் ஸ்தாபனம் என்ற ரீதியில் பாராளுமன்றத்தின்  சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான கருமங்களை ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி, முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்குத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும்,  இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை தான்  எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட அமுல்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிக்கவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்றக் குழுப் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற விவகாரங்களில் முன்மாதிரியாகவும் ஒழுக்கமாகவும் பங்களிக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply