• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டனில் தமது கதையை நாடகமாக்கிய நிறுவனம் மீது வழக்குத் தொடரும் கொலைகாரன்

பிரித்தானியாவில் தமது மருமகளை கௌரவக் கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நபர் ITV நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய நிறுவனம் உருவாக்கியுள்ள நாடகத்தால் தமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தெற்கு லண்டனை சேர்ந்த 20 வயது பனாஸ் மஹ்மோத் என்பவர் தமது கணவரால் அனுபவித்த சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாமல், ஒருகட்டத்தில் கணவரிடம் இருந்து பிரிந்துள்ளார்.

குடும்பத்தினர் ஒப்புதலுடன் நடந்த இந்த திருமணத்தில் இருந்து பனாஸ் மஹ்மோத் விலகியது மூத்த குடும்ப உறுப்பினர்களை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. இதனையடுத்து ஆரி மஹ்மோத் என்பவர் தமது மூன்று உறவினர்களை ஏவி, மருமகளான பனாஸ் மஹ்மோத்தை கொல்ல ஏற்பாடு செய்தார்.

கொலை வழக்கில் சிக்கிய இந்த நால்வரும் 2007 மற்றும் 2010 முதல் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், லண்டனை நடுங்கவைத்த இந்த கொலை வழக்கு தொடர்பில் 2020ல் ITV நிறுவனம் நாடகம் ஒன்றை தயாரித்தது.

சம்பவத்தின் போது வெறும் 20 வயதேயான பனாஸ் வன்கொடுமைக்கு இரையாக்கப்பட்டு, கொடூர துன்புறுத்தலுக்கு உட்படுத்தி அடித்தேக் கொல்லப்பட்டார். அவரது சடலமானது பர்மிங்காம் பூங்காவில் புதைக்கப்பட்டிருந்தது.

முன்னர் லண்டனில் உள்ள ஈராக்கிய குர்து சமூக மக்களிடையே செல்வாக்குடன் வலம் வந்த ஆரி மஹ்மோத் தற்போது கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவரே தற்போது உயர் நீதிமன்றத்தை நாடி, தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு ITV நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால், கொல்லப்பட்ட பனாஸின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,

ஆரி மஹ்மோதின் கோபத்திற்கு இலக்காக விரும்பவில்லை என்றும், தற்போதும் சாட்சிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் அவர் குறித்து நாடகத்தில் வெளிப்படுத்திய அனைத்தும் துல்லியமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தமது செயலுக்கு இதுவரை வருத்தமே தெரிவிக்காத நபர், பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி பணம் பார்க்கத் துடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ITV நிறுவனம் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள லண்டனில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவரை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply