• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காஸா தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது

இலங்கை

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனை நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது”  காஸா நிதியத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குவதற்காக இன்று எனக்கு இங்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

காஸா விவகாரத்தில் அரசாங்கம் வலுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அது என்றும் மாறாது. ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக, காஸா மக்களை பழிவாங்க வேண்டாம். பாலஸ்தீனம் தீர்வை எட்ட உதவ வேண்டும்.
5 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

காலக்கெடு இல்லாமல் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், 40, 50 வருடங்களாக இது குறித்து பேசப்பட்டது. எனவே, காலக்கெடுவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் அது குறித்துத் தனியாக விவாதிக்கலாம்.
ஆனால் பாலஸ்தீன அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்திருக்கிறோம்.
அதை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

காஸா போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக காஸா நிதியத்தை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் ஒரு மில்லியன் டொலரை வழங்க ஏற்பாடு செய்தோம். நாம் சிறிய நாடாக இருந்தாலும், வங்குரோத்து நிலையை அறிவித்திருக்கும் வேளையிலும் ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்திருக்கிறோம்.

இதற்கு பொது மக்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். எனவே இந்த நன்கொடைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் உடல்களை அடக்கம் செய்வது குறித்த பிரச்சினைகளை முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

அது குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை செயற்படுத்தாமல் தனி குழு நியமிக்கப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் மனம் நொந்துள்ளனர். எனவே, உடலை அடக்கம் அல்லது தகனம் செய்தல் அல்லது உடலை விரும்பினால் மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கலாம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வரத் தீர்மானித்திருக்கிறோம்.
எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நான் முன்னுரிமை அளித்துள்ளேன். அந்த இலக்கை மிகக் குறுகிய காலத்தில் அடையலாம். அதன்பிறகு, நாட்டின் மற்றைய பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply