எரிபொருள் விலை உயர்வால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் 5% அதிகரிப்பு
இலங்கை
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பொருட்கள் விநியோகம் மற்றும் இறக்குமதி-ஏற்றுமதித் துறையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கொள்கலன் போக்குவரத்துச் சேவைக் கட்டணங்கள் இன்று (01) திங்கட்கிழமை முதல் 5 சதவீதத்தால் (5%) உயர்த்தப்பட்டுள்ளன.
அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் இந்தத் திடீர் கட்டண உயர்வை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியிருந்தது.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டது.
கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் முழுமையாக டீசல் எரிபொருளிலேயே இயங்குவதால், இந்த விலை உயர்வு தங்களின் தினசரி இயக்கச் செலவை பெருமளவு அதிகரித்துள்ளதாக போக்குவரத்து உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த 5% கொள்கலன் கட்டண உயர்வு காரணமாக, கொழும்புத் துறைமுகத்தில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்கள் மற்றும் வௌிநாடுகளுக்கு அனுப்பப்படும் ஏற்றுமதிப் பொருட்களுக்கான செலவு அதிகரிக்கும்.
இதன் காரணமாக, வரும் நாட்களில் சந்தையில் நுகர்பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
























