• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது - நெதன்யாகு அவசர உத்தரவு

இலங்கை

லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தரைவழி இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறும், அந்நாட்டின் உள்பகுதிகளை நோக்கி முன்னேறுமாறும் இஸ்ரேலியப் படைகளுக்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் இருதரப்பிற்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் இந்த அதிரடித் தாக்குதல் உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தப் போர் தீவிரமடைந்தது.

இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி ஊடுருவல்களால் லெபனானில் இதுவரை 3,370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 24 படையினரும் 4 பிரதானிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

லெபனானில் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல், இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

லெபனானில் அதிகரித்து வரும் இந்த மிக மோசமான வன்முறைச் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, இன்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதே தங்களது நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.தெற்கு லெபனானில் உள்ள மிக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த, 900 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க போஃபோர்ட் கோட்டையையும் அதன் மலைத்தொடரையும் இஸ்ரேலியப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.
 

Leave a Reply