யாழ் நூலக எரிப்பு நினைவு தினம் இன்று
இலங்கை
தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01) 45 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.
இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின.
இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.
1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.
மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட”தமிழ் கலாசாரம்” எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றைய தினம் ( யாழ்ப்பாணப் பொது நூலகத்தில், நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணப் பொது நூலக ஸ்தாபகர் கே. எம். செல்லப்பா மற்றும் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்ட அதிர்ச்சியிலும் வேதனையிலும் உயிரிழந்த அருட்கலாநிதி H.S. தாவீது அடிகள் ஆகியோரின் உருவப்படத்திற்கு மலர் தூபி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 45 ஆண்டுகள் நிறைவடைவதை குறிப்பிடும் வகையில் 45 விளக்குகள் ஏற்றப்பட்டது.
மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி. சி. அரவிந்தராஜ், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ. தயாளன், பொது நூலகப் பிரதம நூலகர் அனுசியா சிவகரன், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஜெ. மயூரன், நூலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.






















