செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு இன்று
இலங்கை
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில் , மே மதம் 09ஆம் திகதி சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
அந்நிலையில், 09ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , ஜூன் 1 ஆம் திகதி (இன்று மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
12 நாட்களாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 21 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் , புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள் , மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 261 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















