கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஓருவர் பலி
கனடா
கனடாவின் மிசிசாகா (Mississauga) நகரில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உருக்குலைந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை இரவு 10:40 மணியளவில் மிசிசாகாவின் செலக்ட் கோர்ட் (Select Court) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த வேளையில் பலத்த வெடிச்சத்தமும் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ அணைக்கப்பட்ட பிறகு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டின் உள்ளே இருந்து ஒருவரது உடல் மீட்கப்பட்டது.
வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் கீழ் தளத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் தற்போது வெளிநாட்டில் (வியட்நாமில்) உள்ளனர்.
எனவே, உயிரிழந்த நபர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்தத் தீ விபத்து "சந்தேகத்திற்குரியது" என பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) விசாரணை நடத்தி வருகிறது.
எனினும், இது திட்டமிட்ட குற்றச்செயலா என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
தற்போது அந்த வீட்டின் அமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளதால், அதிகாரிகள் உள்ளே சென்று முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.
புதன்கிழமை கனரக இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, இடிபாடுகளை அகற்றி விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்பட உள்ளது.
உயிரிழப்புக்கான காரணத்தை தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகம் ஆய்வு செய்யும் எனவும் தீ விபத்துக்கான மூலக்காரணத்தை ஒன்டாரியோ தீயணைப்புத் துறை (Ontario Fire Marshal) கண்டறியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் இருக்க வேண்டிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அப்படியானால் உயிரிழந்த அந்த நபர் யார் என்பதைக் கண்டறிவதே இப்போது எங்களின் கடினமான பணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





















