லெபனானில் குடியிருப்புகளை குண்டுவீசி தகர்க்கும் இஸ்ரேல் - 20 பேர் பலி - 3,670 ஆக உயர்ந்த உயிரிழப்பு
பாலஸ்தீனம் மீது கடந்த 13 மாதங்களாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து அண்டை நாடான லெபனானையும் தாக்கி வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறும் இஸ்ரேல் தலைநகர் பெய்ரூட்டில் குடியிருப்பு கட்டடங்களையும் தகர்த்து வருகிறது.
லெபனானில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 லட்சம் மக்கள் தொகை கொண்ட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி இதுவரை 1,30, 000 பேர் தங்கள் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பெய்ரூட் அருகே உள்ள எல்லை வலியாக அண்டை நாடான சிரியாவுக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர். இதற்கிடையே பெய்ரூட் மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களை அப்பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்தது.
இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட் முழுவதும் உள்ள பல குடியிருப்புகள் மீது நேற்று [சனிக்கிழமை] இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது.
இதையும் படியுங்கள்: மெக்சிகோவில் சோகம்: மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி
கிழக்கு லெபனானில் பால்பெக் மாவட்டத்தில் சிம்ஸ்டார் கிராமத்தில் நடந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். போதாய் கிராமத்தின் மீதான தாக்குதலில் 5 பேர் என மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் லெபனானில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.