• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்

இலங்கை

தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply