வாலால் கின்னஸ் சாதனை படைத்த கழுதை
சினிமா
அமெரிக்காவின் ‘ஹோப்’ என்ற பெண் கழுதை, உலகிலேயே மிக நீளமான வாலைக் கொண்ட கழுதை என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
ஜார்ஜியா மாநிலம் பைரன் நகரில் உள்ள ப்ராஸ்ட் பண்ணையில் கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் ஹோப்பின் வால் அளவிடப்பட்டது. இதன்போது, அதன் வால் 50.73 சென்டிமீற்றர் நீளமுடையதாக உறுதிப்படுத்தப்பட்டது.
‘அமெரிக்கன் மம்மத் ஜாக்ஸ்டாக்’ இனத்தைச் சேர்ந்த ஹோப், இதற்கு முன்னர் உலகிலேயே மிக நீளமான காதுகளைக் கொண்ட கழுதை என்ற சாதனையையும் வைத்திருந்தது.
பின்னர் அந்தச் சாதனை முறியடிக்கப்பட்ட நிலையில், தற்போது நீளமான வால் பிரிவில் மீண்டும் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
2020ஆம் ஆண்டு மிகவும் மெலிந்த நிலையில் கைவிடப்பட்ட ஹோப்பை ஹன்னா ப்ராஸ்ட் என்பவர் மீட்டு வளர்த்து வந்துள்ளார். முறையான பராமரிப்பும் அன்பும் கிடைத்ததன் மூலம் ஆரோக்கியமாக வளர்ந்த ஹோப் தற்போது உலக சாதனையாளராக மாறியுள்ளது.






















