• Welcome to TamilsGuide
செய்திகள் 1

500 ஆண்டுகள் பழமையான டேனிஷ் போர்க்கப்பலில் அரிய போர்க்கவசம் கண்டுபிடிப்பு

தெற்கு ஸ்வீடன் கடற்கரைக்கு அப்பால் பால்டிக் கடலில் மூழ்கியுள்ள 500 ஆண்டுகள் பழமையான டேனிஷ் அரச போர்க்கப்பலின் சிதைவுகளிலிருந்து, மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அரிய போர்க்கவசம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஸ்வீடனின் ரோன்னெபி கடற்கரைக்கு அருகே, பால்டிக் கடலில் அமைந்துள்ள ஸ்டோரா எகோன் தீவுக்கு வடக்கே சுமார் 10 மீற்றர் ஆழத்தில், 'கிரிபின்' (Gribshunden) எனப்படும் குறித்த போர்க்கப்பலின் சிதைவுகள் காணப்படுகின்றன.

கடந்த 1970ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தக் கப்பலில், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல்சார் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது, கப்பலின் முன்பகுதியில் அமைந்திருந்த போர் மேடைக்குக் கீழே உள்ள ஆயுதப் பெட்டிக்கு அருகிலிருந்து இந்தப் போர்க்கவசம் மீட்கப்பட்டுள்ளது.

செப்புக் கலவையால் உருவாக்கப்பட்ட சங்கிலிப் பின்னல் வகையைச் சேர்ந்த இந்தக் கவசம், மிக நுணுக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பால்டிக் கடலின் உப்புத்தன்மை குறைவாக இருப்பதாலும், கடல் புழுக்களின் தாக்கம் இல்லாததாலும், சுமார் 500 ஆண்டுகளைக் கடந்தும் இந்தக் கவசம் சிதைவடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, அக்காலப் போர்க்கப்பல்களின் ஆயுதக் கிடங்குகள், போர்வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கடற்படைப் போர் முறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கு முக்கியமான தொல்லியல் ஆதாரமாக அமைந்துள்ளது. 

15ஆம் நூற்றாண்டில் டென்மார்க் மன்னர் ஹான்ஸுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான போர்க்கப்பலே 'கிரிபின்' ஆகும். 1495ஆம் ஆண்டு ஸ்வீடன் மன்னருடனான பேச்சுவார்த்தைக்காகப் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் கப்பலில் தீப்பிடித்து, அது வெடித்து மூழ்கியதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அந்தச் சமயத்தில் கப்பலில் பயணித்த ஜெர்மன் கூலிப்படையினருக்குச் சொந்தமானதாக இந்தப் போர்க்கவசம் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாகக் கடலுக்கு அடியில் மறைந்திருந்த இந்த அரிய பொருள் தற்போது மீட்கப்பட்டுள்ளமை, 15ஆம் நூற்றாண்டின் கடற்படை வரலாறு மற்றும் போர்வீரர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு புதிய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply