• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டை உலுக்கிய கோர பேருந்து விபத்து! உயிரிழந்தவர்களின் விபரம் மற்றும் காரணம் வெளியாகின

இலங்கை

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு காரணம் வெளியாகியுள்ளன.

நேற்று காலை (10) இடம்பெற்ற இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 61 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்களில், 14 பெண்கள், 44 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் அனுராதபுரம் வைத்தியசாலையிலும், 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் மதவாச்சி வைத்தியசாலையிலும், 3 பெண்கள் மிஹிந்தலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 47 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளதுடன், ரிதிகமவை சேர்ந்த 56 வயதுடைய ஆண் , பதவிய மற்றும் வெயங்கொடவைச் சேர்ந்த 32 மற்றும் 72 வயதுடைய இரண்டு பெண்களும்  அடங்கியுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் பலருக்கு கை, கால் எலும்பு முறிவுகள் உட்பட பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அநுராதபுரம் நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, ஒரு தனியார் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது, ​​எதிர்திசையில் வந்த மற்றொரு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து நடந்த நேரத்தில் மூன்று பேருந்துகளிலும் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் மூன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் ஏகநாயக்க என்ற சாரதி உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, காயமடைந்த பயணிகள் அனுராதபுரம், ராம்பேவ மற்றும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இரு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் அதிவேகமாகவும் மிகவும் பாதுகாப்பற்ற முறையிலும் சென்றுகொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்தொன்றின் டீசல் குழாய் உடைந்து இயந்திரம் பழுதடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.      
 

Leave a Reply