பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு
பாகிஸ்தானில் மருத்துவ கல்லூரிகளில் புதிதாக ஆப்கான் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்தும், ஏற்கனவே படித்து வரும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் தற்போது கல்வியிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே படித்து வரும் மாணவர்களும் உடனடியாகத் தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கவுன்சில், நடப்பு கல்வியாண்டில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்குப் புதிய சேர்க்கை அல்லது இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பயின்று வரும் ஆப்கான் மாணவர்களும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனால் குறிப்பாக, படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற வெளிநாட்டு மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் சுகாதார அமைச்சக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
அங்கு பயிலும் 22 ஆப்கான் மாணவர்களுக்கு தேவையான நிர்வாக நடைமுறைகளை முடித்து வெளியேற 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், முறையான பாஸ்போர்ட் மற்றும் தங்குவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை வைத்திருக்கும் ஆப்கான் மாணவர்கள், நடைமுறையில் உள்ள விதிகளின்படி விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தெரிவித்துள்ளார்.
செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பவர்கள் சட்டவிரோதமானவர்கள் என கருதப்பட்டு, 'சட்டவிரோத வெளிநாட்டவர் வெளியேற்றத் திட்டத்தின்' கீழ் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் 'தெஹ்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான்' பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் த புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு இக்க குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவ மோதல்கள் ஒருபுறமிருக்க கடந்த ஓராண்டில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கான் குடிமக்கள் பாகிஸ்தானில் இருந்து கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மருத்துவ மாணவர்களுக்கு எதிரான தற்போதைய புதிய உத்தரவு, பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கான் குடிமக்கள் மற்றும் மாணவர்கள் மீதான நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.






















