ஆதிக்கம் செலுத்தி விருது வாங்கும் அளவிற்கு தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா - கஸ்தூரிராஜா ஆவேசம்
சினிமா
72வது தேசிய விருதுகள் பட்டியலில், நடிகரும் இயக்குநருமான தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நடிகர் தனுஷிற்கு விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக வதந்தி எழுந்தது.
இதையடுத்து நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் தனுஷிற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது மகிழ்ச்சிதான், அவர் பயணம் பண்ணுகிற வழி, அவருடைய முயற்சிகள், அனைத்துமே அப்படியே இருக்கிறது.
அதனால் அவருக்கு விருது கிடைத்திருக்கிறது. மற்றபடி அதில் அரசியல் நிலைப்பாடு என எதுவும் இல்லை.
அரசு குழு (ஜூரி) எடுக்கும் முடிவுகளில் தான், தேசிய விருது கிடைக்கிறது. இந்த முறை என் மகனுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது, மிகவும் பெருமையான விஷயம்.
தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா, அவர்கள் ஏன் குழுவை அதிகாரம் செலுத்தி (influence) தேசிய விருதுகள் வாங்கவில்லை. இது அரசு மற்றும் தேர்வுக் குழு எடுக்கும் முடுவு தான் என நான் நினைக்கிறேன்.
நான்கு பேரை பார்த்து பேசி, ஐயா எனக்கு விருது கொடுங்க என்றும் சொல்லும் அளவிற்கு, தனுஷிற்கு அவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் கிடையாது.
இதற்கு முன்னதாக அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக அவருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் விருதுகளுக்காக ஏங்குபவர் கிடையாது.
இந்தியாவில் சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டி வாங்கி இருக்கிறார். அப்படி இருக்கும்போது, எனது மகன் விருது வாங்கி இருப்பது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஹபீபி ஒரு இஸ்லாமிய படம் என்று சொல்வதில் எனக்கு கருத்து உடன்பாடு கிடையாது. அந்த படம் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என ஒரு கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கை.
அந்த படத்தில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அந்த படத்திற்காக விருது கிடைத்தால், அதற்கான பெருமை இயக்குநர் மீரா கதிரவனை தான் சேரும்.
இவ்வாறு இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறினார்.





















