யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - ஆரம்பக்கட்ட ஆட்சேபனை நிராகரிப்பு – விசாரணை ஆரம்பம்
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ‘சதித் திட்டம்’ என்ற குற்றச்சாட்டினை சட்டரீதியாக முன்னெடுத்துச் செல்ல முடியாது என அவரது தரப்பு சட்டத்தரணிகளால் ஆரம்பக்கட்ட ஆட்சேபனை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆட்சேபனையை இன்று பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க, பிரதிவாதி தரப்பின் வாதம் அடிப்படையற்றது எனக் கூறி அதனை நிராகரித்தார்.
அக்குற்றச்சாட்டினைத் தொடர்ந்து விசாரணை செய்வதில் எவ்விதச் சட்டத் தடையும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பகிரங்க நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.
இதன்போது, நீதிமன்றக் கூண்டிலிருந்து பதிலளித்த யோஷித ராஜபக்ஷ, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்ததுடன், தான் குற்றவாளி அல்ல என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான முறையான விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் பணமோசடி விவகாரத்தில், தற்போது வழக்கு விசாரணை நேரடி நிலைக்கு வந்துள்ளமை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.





















