நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம் - ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்
இலங்கை
இலங்கையின் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதனை மூடிமறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியைத் தரமற்ற முறையில் டெண்டர் ஊடாகக் கொள்வனவு செய்ததில் பில்லியன் கணக்கான ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை ஒன்றின் மூலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த மோசடிகளை நிராகரித்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், தற்போது அதனை மூடிமறைக்கத் தீவிரமாக முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார்.
இந்த ஊழல் வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல, அது பல்வேறு தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் நாட்டிற்கு ஏற்பட்ட நிதி நட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளன.
நிலக்கரி நிறுவனத் தலைவரே ஒப்புக்கொண்ட அண்மைய ‘ஒலிப்பதிவு’ விவகாரம் இந்த மோசடியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரபல தொழிலதிபர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருக்கும் இடையிலான இரகசிய கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பகுதியே இந்த நிலக்கரி ஊழல் என சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
“அமைச்சரும் செயலாளரும் பதவியிலிருந்து விலகுவது என்பது மக்களின் வரிப்பணத்தில் ஏற்பட்ட பில்லியன் கணக்கான நட்டத்தை மறைக்க அரசாங்கம் ஆடும் ஒரு நாடகம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழலுக்குப் பொறுப்பான அமைச்சரும், அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் முழு அமைச்சரவையும் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடியைப் பாதுகாத்ததன் மூலம், தேசிய மக்கள் சக்தியின் 153 பிரதிநிதிகளும் மக்கள் நம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை வெளியிட்ட சஜித் பிரேமதாச, மக்களின் வரிப்பணத்திற்கு ஏற்படுத்திய நட்டத்திற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.






















