• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் அணுசக்தி விவகாரம் - அமெரிக்க சலுகை மீளப்பெறப்பட்டதாக தகவல்

ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த நிபந்தனையை ஈரான் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணுசக்தி செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு முடக்கும் பட்சத்தில், ஒரு நிரந்தர உடன்படிக்கைக்கு வரலாம் என அமெரிக்காவும் பாகிஸ்தானும் ஈரானுக்கு முன்மொழிந்திருந்தன.

எனினும், இந்த நீண்டகாலக் கட்டுப்பாட்டை ஏற்க மறுத்த ஈரான், தனது தரப்பிலிருந்து ஒரு மாற்று முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது.

ஈரானின் இந்த பிடிவாதமான போக்கைத் தொடர்ந்து, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 20 ஆண்டுகால சலுகையை அமெரிக்கா தற்போது மீளப்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இன்று லெபனானில் அமுலுக்கு வந்துள்ள போர்நிறுத்தம், ஈரானுடனான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அமைதிச் சூழல், இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலைக் குறைக்க உதவும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈரான் முழுமையான நம்பிக்கையுடன் பங்கேற்பதற்கு, சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது அவசியமானது என ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிதி விடுவிப்பு இடம்பெற்றால் மட்டுமே அடுத்தகட்ட நகர்வுகள் ஆக்கப்பூர்வமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply