இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!
இலங்கை
இந்தியத் திரையுலகின் இசைக்குயில் என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மும்பையில் இன்று காலமானார்.
மும்பையில் வசித்து வந்த 92 வயதான பாடகி ஆஷா போஸ்லேவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்துள்ளார்.
மறைந்த ஆஷா போஸ்லேவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணியளவில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே, இந்திய இசை உலகின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்தவர்.
20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றவர்.
தமிழில் ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘நீ பார்த்த பார்வை’ (ஹேராம்), ‘செப்டம்பர் மாதம்’ (அலைபாயுதே), ‘கொஞ்ச நேரம்’ (சந்திரமுகி) போன்ற காலத்தால் அழியாத பல ஹிட் பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றவர்.
அவரது இசைத் தொண்டைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம விபூஷண்’ வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் ஆஷா போஸ்லேவின் மறைவுச் செய்தி கேட்டு இந்தியத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இசைத் துறையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன.























