கனடா குடியுரிமைச் சட்டத்தில் அதிரடி மாற்றம் - அமெரிக்காவிலிருந்து குவியும் விண்ணப்பங்கள்
கனடா
கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தம் காரணமாக, அமெரிக்காவிலிருந்து கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக குடிவரவு சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2025 டிசம்பரில் ஓட்டாவாவில் நிறைவேற்றப்பட்ட Bill C-3 (குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா), கனடாவுக்கு வெளியே பிறந்தவர்களுக்கும் ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டுள்ளது.
இதற்கு முன்னர், வெளிநாட்டில் பிறந்த முதலாம் தலைமுறை கனடியர்களுக்கு மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் உரிமை இருந்தது.
ஆனால், புதிய சட்டத்தின்படி கனடாவில் பிறந்த ஒருவரின் நேரடி வாரிசுகள் (பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எத்தனை தலைமுறையினரும்) குடியுரிமை கோர முடியும். கனடியப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இந்த உரிமை பொருந்தும்.
2025 டிசம்பர் 15-ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த, கனடிய வம்சாவளியைச் சேர்ந்த எவரும் இந்தச் சட்டத்தின் கீழ் தகுதி பெறுகின்றனர். குடியுரிமை கோருவதற்கான கதவு இப்போது அகலமாகத் திறந்துள்ளது.
ஆனால், தகுதியுள்ளவர்களுக்கு குடியுரிமை தானாகக் கிடைத்துவிடாது. அவர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, தாங்கள் கனடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்," என ஓட்டாவாவைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி கசாண்ட்ரா ஃபல்ட்ஸ் (Cassandra Fultz) தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்ட மாற்றம் வெளியானதிலிருந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை 'வெடிப்பைப் போல' (Exploded) அதிகரித்துள்ளதாக ஃபல்ட்ஸ் குறிப்பிட்டார்.
குறிப்பாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விண்ணப்பங்கள் குவிகின்றன. கனடா அரசு தற்போது குடிவரவைக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்னெடுத்து வரும் போதிலும், இந்தச் சட்ட மாற்றத்தை தவிர்க்க முடியாமல் போனது.
2023-இல் ஒண்டாரியோ உயர் நீதிமன்றம், "தலைமுறை அடிப்படையில் குடியுரிமையை மறுப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது" எனத் தீர்ப்பளித்திருந்தது. இதன் விளைவாகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.























