விஜய் நடிக்க இருந்த கதையில் சூர்யா - உண்மையை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி
சினிமா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் வருகிற மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக கருப்பு திரைப்படத்தின் கதையில் நடிகர் விஜய் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகின. எனினும், அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், "கருப்பு" திரைப்படத்தின் கதை முதலில் விஜய்யிடம் சொன்னதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசும் போது, நடிகர் விஜய்யிடம் கருப்பு திரைப்படத்தின் கதையை கூறினேன். அவர் இந்தப் படத்தில் நடிக்க உடனே தொடங்கவும் ஆர்வம் காட்டினார். எனினும், திரைக்கதைக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டதால் அது சாத்தியமாகவில்லை. விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில், தற்போது சில மாற்றங்களுடன் இந்த கதை சூர்யாவிற்கு விவரிக்கப்பட்டது. இதுவே தற்போது கருப்பு திரைப்படமாக உருவாகி இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.






















