• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரீஎண்ட்ரி குறித்து மனம் திறந்த பூவே உனக்காக சங்கீதா 

சினிமா

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சங்கீதா. விஜய்யுடன் 'பூவே உனக்காக' படத்தில் நடித்து புகழ்பெற்ற இவர். தமிழில் கடைசியாக 2000-ம் ஆண்டு 'கண் திறந்து பாரம்மா' என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம், 'காளிதாஸ் 2'. பரத் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அஜய் கார்த்திக், அபர்னதி, பவானி ஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘பைவ் ஸ்டார்' செந்தில் இயக்கியுள்ளார்.

சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சங்கீதாவிடம், '25 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காதது ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சங்கீதா, "வீட்டில் எனக்கு வேலைகள் குவிந்து விட்டது. ஆனாலும் சினிமாவை விட்டு நான் தூரம் போகவில்லை. ஏனெனில் என் கணவர் (ஒளிப்பதிவாளர் - இயக்குனர் சரவணன்) சினிமாவில் தான் இருக்கிறார். இதுநாள் வரை என் வீட்டுக்கான கடமைகளை சரியாக செய்துவிட்டேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இந்தச் சூழலில்தான் என்னை பாதிக்கும் கதையாக 'காளிதாஸ் 2' அமைந்தது. அதனால் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

இத்தனை ஆண்டுகள் வீட்டில் ராணி மாதிரி இருந்து விட்டு, மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். பொதுவாகவே 'இதுதான் வசதி' என்று நினைக்கும் நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு மாற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் அடுத்த கட்ட பயணங்கள் ஆரம்பிக்கும். அந்த வகையில் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.


 

Leave a Reply