அமெரிக்காவில் பனிப்புயல்; 30 பேர் பலி - 12,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து
அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில் நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர் உயிரிழந்துள்ளனர். மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோவில் பனி அகற்றும் வாகனங்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்.
டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மிசிசிப்பி மற்றும் டென்னசி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 5,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.
பனிப்புயல் காரணமாக இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளை வீதிகளில் பனி மலைபோல் குவிந்துள்ளதால் பல மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் போன்ற நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மிசிசிப்பி பல்கலைக்கழகம் இந்த வாரம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் வெப்பநிலை -31°C (மைனஸ் 31 டிகிரி செல்சியஸ்) வரை குறைந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.






















