வெனிசூலா தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ள கனடா
கனடா
வெனிசூலாவில் பாதுகாப்பு அபாயங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டுக்கு அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய அரசு தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“வெனிசூலாவின் தற்போதைய நிலைமை மிகவும் பதற்றமானது; எப்போது வேண்டுமானாலும் மோசமடையலாம். எல்லைகள் மற்றும் வான்வெளி குறுகிய நேரத்தில் மூடப்படக்கூடும்” என ஒட்டாவா தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை, வெனிசூலா மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதல்கள், தலைநகர் கராகஸில் பல இடங்களை இலக்காக்கிய நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ, அவரது மனைவி கைது செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.
“வெனிசூலாவிலுள்ள கனடா தூதரகம் 2019 முதல் செயல்படவில்லை. அங்கு உள்ள கனடியர்களுக்கு தூதரக உதவி வழங்கும் எங்கள் திறன் மிகக் குறைந்துள்ளது.
தொலைநிலையிலேயே சேவைகள் வழங்கப்படுகின்றன” என பயண அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கையை மீறி வெனிசூலாவுக்கு பயணம் செய்வோர், பாதுகாப்பான இடத்தில் தங்க தயாராக இருக்க வேண்டும், போதிய உணவு, குடிநீர் கையிருப்பு வைத்திருக்க வேண்டும், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர தூதரக உதவி தேவைப்படுவோர், கனடாவிலிருந்து: 1-800-387-3124, வெளிநாட்டிலிருந்து: 1-613-996-8885, மின்னஞ்சல்: sos@international.gc.ca என்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசூலா நிலவரத்தை கருத்தில் கொண்டு, எயார் கனடா நிறுவனம் அபராதம் இன்றி விமான பயணத் திகதிகளை மாற்ற அனுமதிக்கும் சிறப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.























