நான் செய்த சில தவறுகள் - மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா
சினிமா
இளம் வயதிலேயே சினிமாவில் நுழைந்த ஸ்ரீலீலா, ஆரம்பத்தில் படத் தேர்வுகளில் தெளிவின்மையால் சில தவறுகளைச் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் இப்போது தனது முடிவுகளை தானே எடுத்து, வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளதாக மனம் திறந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் இடம்பிடித்திருப்பவர் நடிகை ஸ்ரீலீலா. தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இளம் வயதிலேயே சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்த வெற்றிகளைச் சந்தித்து வரும் ஸ்ரீலீலா, தனது திரைப்பயணம் குறித்துப் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் மும்பையில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. ஆனால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், அப்போது வந்த பல வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் மிகவும் இளம் வயதிலேயே சினிமாவுக்குள் வந்துவிட்டதால், ஆரம்பத்தில் எந்தப் படத்தைத் தேர்வு செய்வது என்ற தெளிவோ, அதிகாரமோ என்னிடம் இல்லை. வந்த வாய்ப்புகளையெல்லாம் தயக்கத்துடனேயே அணுகினேன்.
ஒரு கட்டத்தில் நான் தேர்வு செய்து நடித்த படங்கள் குறித்தே எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்தன. ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கடந்த காலத்தில் நான் எடுத்த முடிவுகளைப் பற்றி யோசிப்பேன். அப்போதுதான் எங்கே தவறு செய்தேன் என்பது புரியத் தொடங்கியது.
நம்முடைய வாழ்க்கை மாற வேண்டும் என்றால், நாமே முடிவுகளை எடுக்கத் தொடங்க வேண்டும். முன்பு வந்த வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினேன். ஆனால் இப்போது எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்யத் தொடங்கிவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.























