• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு

இலங்கை

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) அவர்களுக்கும் இடையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான பொருளாதார அபிவிருத்தி மற்றும் நீல-பசுமைப் பொருளாதாரத்திலுள்ள வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் கடல்சார் மற்றும் கரையோர வளங்கள், பல்லுயிர் பெருக்கம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள் தொடர்பான ஆற்றல்களைப் பொருளாதார மற்றும் சமூகப் பயன்களாக மாற்றுவதற்கு விஞ்ஞான ஆராய்ச்சி, தொழில்நுட்பப் புத்தாக்கம், அறிவுப் பரிமாற்றம் மற்றும் பொறுப்பான முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், கடல்சார் பாதுகாப்பு, காலநிலை மீள்திறன், அனர்த்த முன்னாயத்தம் மற்றும் நிலையான வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் ஊடாக முதலீடுகள், வேலைவாய்ப்புகள், கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியவற்றை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு இலங்கை – சீன இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவும், இரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 75ஆவது ஆண்டு நிறைவும் கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் சீனாவுடனான இலங்கையின் நட்புறவை வலுப்படுத்துவதற்குத் தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

Leave a Reply