• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2027 வரவு - செலவுத் திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஏமாற்றுத் திட்டமே - ஜனாதிபதியைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை

தூய நோக்கத்துடன், நேர்மையான இலக்குடன் உருவாக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் அல்ல இது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

ஏழைகளை ஒதுக்கிவிட்டு, பணக்காரர்களுக்கு மாத்திரம் இடம் கொடுக்கும் ஒரு ஏமாற்றுத் திட்டத்தையே ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2026) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி இரண்டு உலகங்களுக்கு இடையே வழிதவறி நிற்பது போலவே அவரது செயற்பாடுகள் உள்ளன. ஏனெனில், அவர் அரசியல் பிறப்பிலிருந்தே ஒரு மார்க்சிசவாதி. ஆனால், அக்கொள்கையை இப்போது மறந்துவிட்டு, புதிய தாராளவாதக் கொள்கையின் கப்டனாக அவர் மாறிவிட்டார்.

அவர் முன்வைத்திருப்பது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும், அவர்களை மேலும் ஏழைகளாக்கிவிட்டுப் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வரவு - செலவுத் திட்டமாகும். ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில் புத்த பெருமானின் உன்னத போதனையான 'சக்கவத்தி சீஹநாத சூத்திரத்தை' மேற்கோள் காட்டினார்.

நாட்டை எவ்வாறு ஆள்வது, வரவு - செலவுத் திட்டங்களை எவ்வாறு வகுப்பது என்பதையெல்லாம் அது கூறுகின்றது. அந்தச் சூத்திரத்துடன் இந்தப் பாதீட்டை ஒப்பிட்டுப் பார்த்தால், முறைகேடு, அநீதி, அழுத்தம், அமைதியின்மை மற்றும் நெருக்கடிகளையே இது நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

தற்போதைய காலகட்டத்தில் மிக ஏழ்மையான 20 சதவீதமான மக்களின் உண்மையான குடும்ப வருமானம் 19.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், மிகப் பணக்கார 20 சதவீதத்தினரின் குடும்ப வருமானம் 6.8 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி 14.8 மடங்காக அதிகரித்துவிட்டது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நாட்டின் 60 சதவீதமான மக்கள் வறுமையில் வாடும் நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்காக இந்த வரவு - செலவுத் திட்டத்தில் கடுகளவு கூட நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.

நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் எவவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. காய்கறி மற்றும் ஏற்றுமதிப் பயிர்ச் செய்கைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன.

68 இலட்சம் மக்கள் வாக்களித்தது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையுமான உருவாக்கவே தவிர, மக்களின் எதிர்பார்ப்புகளையும் 220 இலட்சம் மக்களின் கனவுகளையும் மழுங்கடிப்பதற்கல்ல. எனவே, தீவிர மார்க்சியத்தையும் புதிய தாராளவாதக் கொள்கையையும் கைவிட்டு, நாட்டின் சமூக ஜனநாயகம் மற்றும் சமூகச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி வருமாறு அரசாவத்தைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
 

Leave a Reply