லுலா டா சில்வாவின் வெற்றிக்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து
இலங்கை
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 96 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் இந்த வெற்றிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரேசில் மக்கள் ஒரு தேர்தல் வெற்றியை விட மேலான ஒன்றை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று, பிரேசில் மக்கள் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்ல; அவர்கள் ஊழல், பிளவு மற்றும் அரசியல் பொய்களைக் கொண்ட சக்திகளைத் தோற்கடித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், லூலாவின் இந்த வெற்றி, அரசியல் வம்சங்களாலும் காலாவதியான அரசியல் சக்திகளாலும் மக்களைத் திசைதிருப்ப முடியாது என்பதற்கு ஒரு சான்றாகும் என்று ஜனாதிபதி விவரித்தார்.
லூலாவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார, அவரது தலைமைத்துவத்தைப் பாராட்டியதுடன், பிரேசிலின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்குத் தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
பிரேசிலின் மூத்த இடதுசாரி ஜனாதிபதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடும் போட்டி நிலவிய தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் மீண்டும் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது வலதுசாரி போட்டியாளரான பிளாவியோ போல்சோனாரோவை தோற்கடித்தார்.
எனினும், போல்சோனாரோ இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், லுலா 51.79 சதவீத வாக்குகளையும், போல்சோனாரோ 48.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக பிரேசிலின் உயர் தேர்தல் நீதிமன்றம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






















