• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற வானிலையால் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

இலங்கை

மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, பஸ்பாகே கோரளை (Pasbage Korale) பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களில் பெய்த கனமழையினால், மகாவலி ஆற்றின் கரையோரத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (26) முற்பகல் 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (27) முற்பகல் 11.30 மணி வரை அமுலில் இருக்கும்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகளின் ஊடாகச் செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மகாவலி ஆற்றின் அருகாமையில் வசிப்பவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும், வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள களு கங்கை ஆற்றினை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மழைப்பொழிவு நிலைமைகள் மற்றும் நதி நீர் மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள நீர் மட்டங்களின் அடிப்படையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் களு கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களும், அந்த இடங்கள் வழியாகப் பயணம் செய்யும் வாகன சாரதிகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply