2 ஆவது முறையாகவும் இலங்கை வந்த அமெரிக்க போர்க் கப்பல்
இலங்கை
அமெரிக்காவின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் கான்பெரா (LCS 30) வழக்கமான துறைமுக வருகைக்காக இன்று (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலின் வருகை குறித்து உறுதிபடுத்தியுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம், வருகை தந்த யுஎஸ்எஸ் கான்பெராவுக்கு இலங்கை கடற்படையால் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பைப் பாரட்டியுள்ளது.
தூதகரத்தின் தகவலின்படி, ஜூன் மாதத்தில் கொழும்பு துறைமுக வருகை தந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் இலங்கைக்கு இக்கப்பல் மேற்கொள்ளும் இரண்டாவது வருகை இதுவாகும்.
மேலும் இது, அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால கூட்டாண்மையையும், இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும் கடல்சார் பாதுகாப்பிற்கான அவற்றின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
USS கன்பெரா (LCS 30) என்பது அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலுள்ள மொபைல் நகரில் கட்டப்பட்ட, இன்டிபென்டன்ஸ் வகையைச் சேர்ந்த கடலோரப் போர்க்கப்பலாகும்.
வேகம், நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல், கடலோரப் பகுதிகளிலும் திறந்த கடலிலும் செயல்படும் திறனைக் கொண்டுள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மாற்றியமைக்கக்கூடிய பணி அமைப்புகளுடன் கூடிய இந்தக் கப்பல், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கடல் கண்ணிவெடிகளை முறியடிக்கவும், அமெரிக்க கடற்படையின் இருப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் திறன் கொண்டது.
இந்தோ-பசிபிக் பகுதியில் அதன் செயல்பாடுகள், முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பேணுவதற்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த பிராந்திய கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அமெரிக்க கடற்படையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






















