அமெரிக்கன் ஏர்லைன்ஸ் டயர் வெடித்து விபத்து
ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலிருந்து சிக்காகோ நகருக்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், சிக்காகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது டயர் வெடித்ததில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஃப்ளைட் 41 என்ற போயிங் 787-800 ரக விமானத்தில் 234 பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 245 பேர் பயணம் செய்துள்ளனர்.
விமானம் தரையிறங்குவதற்கு முன்னர், அதன் வலது பக்கப் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, “எங்கள் விமானத்தின் வலது பக்கப் பிரேக் பழுதுபட்டு உரசக்கூடும்” என விமானி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவசர நிலையை கருத்திற்கொண்டு விரைவாகச் செயற்பட்டு, ஓடுபாதையில் விமானத்தை விமானிகள் வெற்றிகரமாக நிறுத்தியுள்ளனர்.
விமானம் நிறுத்தப்பட்டதும், ஓடுபாதையிலேயே பயணிகள் இறங்குவதற்காக ஏணிகள் அமைக்கப்பட்டு, அனைவரும் பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் தற்காலிகமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதுடன், அதன் பராமரிப்புக் குழுவினர் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து வருவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாகச் செயற்பட்ட விமானப் பணியாளர்களின் தொழில்முறைத் திறனைப் பாராட்டியதுடன், அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளது.






















