• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை

இலங்கை

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் வழக்கமான மின் உற்பத்திப் பணிகள் நாளை (22) மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் (The National System Operator) தெரிவித்துள்ளது.

குறித்த அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 250 மெகாவாட் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, திட்டமிட்ட மின்வெட்டுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவர் பி.எல். பிரதீப் பிரியதர்ஷன பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில், இரவு நேர மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 2,800 மெகாவாட் மின்சாரம் அவசியமாக உள்ளதாகவும், எனினும், திங்கட்கிழமை இரவு 2,570 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே விநியோகிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலதிக மின்சார உற்பத்திக்கு எரிபொருள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய மின்தடை ஏற்படும் சந்தர்ப்பங்களில், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி அலகுகள் செயலிழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி அலகுகள் பாதுகாப்பாகவும் தொடர்ச்சியாகவும் இயங்குவதற்கு, அதன் துணைச் செயல்பாட்டு அமைப்புகளுக்கு மின்சாரம் தொடர்ந்து கிடைப்பது அவசியமாகும்.

நிலக்கரியை கொதிகலன்களுக்குக் கொண்டு செல்லும் அமைப்புகள், எரிப்புச் செயல்முறையைப் பராமரிக்கும் விசிறிகள் மற்றும் நீர்ப்பம்புகள், உபகரணங்களின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டும் நீர்ப்பம்புகள், அத்துடன் செயல்பாடுகளைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு மற்றும் அளவீட்டு அமைப்புகள் ஆகியவை இதற்குள் அடங்குகின்றன.

பொதுவாக, இந்தத் துணை அமைப்புகளுக்குத் தேவையான மின்சாரம், மின் நிலையத்தின் சொந்த மின் பிறப்பாக்கிகள் அல்லது வெளிப்புற மின் விநியோகத்தின் ஊடாகப் பெறப்படுகிறது.

எனினும், தேசிய மின் கட்டமைப்பில் பாரிய இடையூறு ஏற்பட்டு, மின் உற்பத்தி அலகு கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில், துணை அமைப்புகளுக்கான மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து பேணுவது அல்லது விரைவாக மீளமைப்பது அவசியமாகும்.

அவ்வாறு மின்சார விநியோகம் தடைப்படும் பட்சத்தில், உபகரணங்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைப்புகள் தானாகவே மின் உற்பத்தி அலகைச் செயலிழக்கச் செய்யக்கூடும்.

Leave a Reply