நேபாளத்தைப் போன்று இலங்கையிலும் அனர்த்தங்கள் ஏற்படலாம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவைப் போன்ற அசம்பாவிதங்கள் சிறிய அளவிலேனும் இலங்கையிலும் எந்நேரத்திலும் நிகழக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன எச்சரித்துள்ளார்.
நேபாளப் பேரழிவு இலங்கைக்கு நேரடிப் படிப்பினையைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட 'திட்வா' சூறாவளியின் போது சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அந்த மண்சரிவினால் அப்பகுதியின் கால்வாய் அடைக்கப்பட்டு, முழு கிராமமும் நீரில் மூழ்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் உள்ள சிதைவடைந்த பாறைகளும் பெரிய மண் அடுக்குகளும் சரிந்து வீழும் போது நீர்நிலைகள் அடைபடக்கூடும். இதனால் தேங்கும் பெருமளவிலான நீர் திடீரென தடையை உடைத்துக்கொண்டு கீழ்நோக்கிப் பாய்வதால் எதிர்பாராத பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாதாரண மண்சரிவுப் பகுதிகளை வரைபடமாக்குவது போல, நீர்நிலைகள் அடைக்கப்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளையும் விரைவாக வரைபடமாக்கி, முன்அறிவிப்புகளை விடுப்பது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் சரசவிகம பகுதியில் இடம்பெற்ற பேரழிவு போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என பேராசிரியர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.






















