ஆல்பெர்ட்டா பிரிவினை வாக்கெடுப்பு - வெளிநாட்டுத் தலையீடு தீவிரமாக உள்ளதாக ஆய்வில் தகவல்
கனடாவிலிருந்து ஆல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இது தொடர்பான இணைய விவாதங்கள் வெளிநாடுகளின் தவறான தகவல் பிரச்சாரங்களுக்குப் பெரும் இலக்காக மாறியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
ரெஜினா பல்கலைக்கழகத்தின் 'செயற்கை நுண்ணறிவு, தரவு மற்றும் மோதல் மையத்தின்' இணை இயக்குநரும், 'Cipher AI' நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியுமான பிரையன் மெக்குவின் தலைமையிலான குழுவினர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போலியான உள்ளடக்கப் பண்ணைகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தவறான தலைப்புகள், கட்டுரைகள் மற்றும் பொய் கதைகள் மூலம் மறைமுகமாக இந்த விவாதத்தில் செல்வாக்கு செலுத்த முயல்கிறது.
பெரும்பாலான தலையீடுகள் ரஷ்யாவுடனே தொடர்புடையவை. அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பகிரங்கமாக கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் வெளிப்படையாகச் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
"மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்க வைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்" என்று பிரையன் மெக்குவின் குறிப்பிட்டார். சைமன் ஃபேசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகமது அல்-ராவி கூறுகையில், "மக்களோடு மக்களாகப் போலியாக நடித்து சிலர் இத்தகைய கருத்துகளைப் பரப்புகின்றனர், இது குறித்துக் கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து கனடிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் காவல்துறை தமக்கு விளக்கமளித்துள்ளதாக ஆல்பெர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுவரை குற்றவியல் அளவிலான சட்டவிரோதத் தலையீடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் ரஷ்யாவுடன் தொடர்புடைய 'போட் ஃபார்ம்கள்' மூலம் தகவல்கள் அதிகளவில் பரப்பப்படுவது கவலையளிக்கிறது என்று கூறியுள்ள முதல்வர், இணையத்தில் தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுவாக்கெடுப்பு வரும் அக்டோபர் 19 அன்று நடைபெறவுள்ளது.























