ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் – ரவிகரன் எம்.பி
இலங்கை
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.
அப்பகுதிமக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்டார்.
குறிப்பாக ஒலுமடுக் கிராமத்தில் உள்ளக வீதிகளின் சீரின்மைதொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு ஒலுமடு பாடசாலையில் போதிய ஆசிரிய ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக்கூறப்பட்டது.
அதேவேளை காட்டுயானைகளால் கிராமமக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்கள் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அதனையடுத்து சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட பல வீடுகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றமை தொடர்பிலும் தற்போது வீட்டுத் திட்டத்திற்கென வழங்கப்படுகின்ற ஒருமில்லியன் ரூபாய் போதாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் முறையீடுசெய்யப்பட்டது.
குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல் நிலைமைகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன்இ ஒலுமடுக் கிராமத்தின் சிறுவர் கழகத்தினருக்கான விளையாட்டு உபகரணங்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் மகளிர் கழகத்தினருக்கான தேவைப்பாடுகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் பெண்கள்இ பாடசாலை மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற விதத்தில் அக்கிராமத்தில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையதினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது மக்களால் முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மக்களால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள்இ சிக்கல் நிலைமைகள்இ கோரிக்கைகள் தொடர்பில் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவற்றைத் தம்மிடம் எழுத்துமூலமாகக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் அவைதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்தார்.





















