• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்டாரியோவில் தீவிரமடையும் காட்டுத்தீ

கனடா

கனடாவின் வடக்கு ஒன்டாரியோ பகுதியில் சுமார் 200 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருவதால், அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

இந்த பயங்கரத் தீ விபத்தில் ஏராளமான குடியிருப்புகளும் பொதுக் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. மேலும், மாகாணம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

மாகாண நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது மொத்தம் 185 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து கொண்டிருக்கிறது.

இதில் வடமேற்கு பிராந்தியத்தில் 148 இடங்களிலும், வடகிழக்கு பிராந்தியத்தில் 37 இடங்களிலும் தீ பரவி வருகிறது. வடமேற்கு பகுதியில் உள்ள காட்டுத்தீயில் 69 இடங்கள் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்த திடீர் காட்டுத்தீயால் 'நமைகோசிசாகாகுன்' (காலின்ஸ்) என்ற பூர்வகுடி மக்கள் வசிக்கும் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால், அவசரக் கால உதவிப் பிரிவினர் வருவதற்கு முன்பே, மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படகுகள் மூலம் அவசரமாக வெளியேறியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆம்ஸ்ட்ராங் (Armstrong) உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் அவசர வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் இரயில் பாதைக்கு மிக அருகில் தீ சூழ்ந்ததால், இரயில் பணியாளர்கள் பெரும் ஆபத்துக்கு இடையே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வடக்கு பகுதியில் எரியும் காட்டுத்தீயின் புகை மாகாணத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

குறிப்பாக, தலைநகர் டொராண்டோவில் கடும் வெயில் நிலவி வரும் வேளையில், இந்த புகை மூட்டத்தால் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ளது. 
 

Leave a Reply