மனைவியைக் கொன்ற 74 வயது முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
தனது மனைவியைக் குத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 74 வயது முதியவருக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
புளோரிடாவின் நவீன வரலாற்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மிக வயதான நபர் இவராவார்.
டஸ்டி ரே ஸ்பென்சர் என்ற அந்த முதியவருக்கு, ஸ்டார்க் நகருக்கு அருகில் உள்ள புளோரிடா மாநில சிறைச்சாலையில் மாலை 6:10 மணியளவில் நச்சு ஊசி செலுத்தப்பட்டு மரணம் உறுதி செய்யப்பட்டது.
மாலை 6 மணிக்கு மரண தண்டனை அறைக்கான திரை விலக்கப்பட்ட போது, இரும்பு மேசையில் கட்டப்பட்டிருந்த ஸ்பென்சரிடம் அவரது கடைசி வாக்குமூலம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "மன்னித்து விடுங்கள், எனது குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இறைவா, என் ஆன்மாவை உமது கைகளில் ஒப்படைக்கிறேன். நான் உன்னிடம் வந்து கொண்டிருக்கிறேன், ஆமென்" என கூறினார்.
அவர் பேசி முடித்தவுடன் நச்சு மருந்துகள் செலுத்தப்பட்டு, சில நிமிடங்களில் அவரது அசைவுகள் நின்றன. நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த 1991 டிசம்பரில் தனது மனைவி கரேன் ஸ்பென்சரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில் டஸ்டி ரே ஸ்பென்சர் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்தபோதே, தான் வெளியே வந்தவுடன் மீதி வேலையை முடிப்பதாக மனைவியை மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 1992 ஜனவரி 18 அன்று கரேனின் பதின்ம வயது மகனை இரும்புப் பெட்டியால் தாக்கிய ஸ்பென்சர், அடுத்த சில நாட்களில் கரேனை செங்கல்லால் தலையில் தாக்கியுள்ளார். தாயைக் காப்பாற்ற அவரது மகன் துப்பாக்கியால் சுட முயன்றும், அது வேலை செய்யவில்லை.
இறுதியாக, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, கரேன் நெஞ்சில் பல கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் 1992-ஆம் ஆண்டே ஸ்பென்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.























