• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலவு பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை 53 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது.

இதில் கடந்த 2-ந்தேதி ஓரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்தனர். நிலவுக்கு மிக அருகில் (6, 545 கிலோ மீட்டர் தொலைவு) சென்றனர்.

மேலும் நிலவில் பின் பகுதியை முதல் முறையாக விண்வெளி வீரர்கள் பார்த்தனர். மனித கண்களால் இதுவரை பார்க்காத வகையிலான புகைப்படங்களை எடுத்து அனுப்பினர். பின்னர் அவர்கள் பூமியை நோக்கி புறப்பட்டனர்.

இன்று அதிகாலை 4 விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம், சான்டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கியது. பூமியில் தரை இறங்கும் இறுதிக்கட்ட பணியில் ஓரியன் விண்கலம் அதன் சேவைப் பகுதியை கழற்றிவிட்டு, விண்வெளி வீரர்கள் இருக்கும் முக்கியப் பகுதியை மட்டும் தரை இறங்குவதற்குத் தயார் செய்தது.

பின்னர் ஓரியன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நுழைந்தது.

விண்கலம் பூமியின் அடர்த்தியான காற்று மண்டலத்திற்குள் நுழைந்து வேகம் குறையத் தொடங்கியதும் பாராசூட்டுகள் விரிவடையத் தொடங்கின. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும்போது, 3 பிரம்மாண்டமான ஆரஞ்சு நிற பாராசூட்டுகள் விரிவடைந்து விண்கலம் கடலில் தரை இறங்கியது.

அதன்பின் அமெரிக்கக் கடற்படை கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் மீட்புப் படையினர் சென்று விண்கலத்தில் இருந்த நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர். கிறிஸ்டி னா கோச், கனடாவின் ஜெர்மி ஹேன்சன் ஆகியோரை அழைத்து கொண்டு கப்பலுக்கு வந்தனர். இதன்மூலம் நிலவுக்கான 10 நாள் பயணம் வெற்றிகரமாக முடிந்து உள்ளது.

ஆர்டெமிஸ் குழுவினர் பூமியில் இருந்து 406,771 கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்து 1970-ம் ஆண்டு அப்பல்லோ-13 திட்டத்தின் 4,00,171 கி.மீ பயண சாதனையை முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 2028-ம் ஆண்டு ஆர்டெமிஸ்-4 திட்டத்தின் கீழ் நிலவின் தென்துருவத்தில் மனிதர்கள் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.


 

Leave a Reply