• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐம்பது வருஷம் முடிஞ்சு போச்சு.ஆனாலும் இந்தப் படத்தைப் பார்க்க இப்போதும் கூட்டம் அள்ளுது

சினிமா

இந்திய திரையுலகில் இன்று வரை ஒரு படத்தைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம்.உலக சினிமா ரசிகர்கள் ஒரு பத்து இந்திய திரைப்படங்களை பட்டியலிட்டால் அதில் கட்டாயம் இந்தப் படமும் இடம் பெற்றிருக்கும்.அந்தப் படம் தான் ஷோலே!.. 1975 ம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தில் வெளியான படம் ஷோலே!..ஐம்பது வருஷம் முடிஞ்சு போச்சு.ஆனாலும் இந்தப் படத்தைப் பார்க்க இப்போதும் கூட்டம் அள்ளுது.அப்படியென்ன இந்தப் படத்திலிருக்கு.?. இந்தப் படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு என்ன காரணம்?. ஷோலேவின் திரைக் கதை தான் காரணம்.இந்த ஸ்கிரிப்ட்டுக்குச் சொந்தக்காரர்கள் இரு நண்பர்கள்.சலீம் கானும் ஜாவேத் அக்தரும்.

சல்மான் கானின் தந்தையும் கவர்ச்சி ராணி ஹெலனின் கணவருமான சலீம் கான் தனது நண்பனும் ஷபானா ஆஸ்மியின் கணவருமான ஜாவேத் அக்தரோடு இணைந்து உருவாக்கிய ஸ்கிரிப்ட் தான் இந்த ஷோலே! எழுபதுகளில் சலீம் ஜாவேத் ஜோடி பல சூப்பர் ஹிட்டுக்களை தந்த ஜோடி.ஷோலேவின் அவுட் லைனை இந்த ஜோடி பல பிரபல இயக்குநர்களிடம் சொல்லிப் பார்த்தது யாருமே கண்டுகொள்ளவில்லை.சச்சா ஜூட்டா எடுத்து வெற்றி பெற்ற மன்மோகன் தேசாயிடமும் சொல்லிப் பார்த்தார்கள்.அட!. போங்கப்பா!..கள்ளக் கடத்தல் மாஃபியா கேங் பற்றி கதையிருக்கா?? ஸஞ்ஜீர் படத்தை எடுத்த பிரகாஷ் மெஹ்ராவிடமும் கதையைச் சொன்னார்கள்.இதற்கும் ஸஞ்ஜீர் சலீம் ஜாவேத் கதை.இதைத் தான் தமிழில் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார்கள்.

ஒல்லியா ஒடிசலா யாருமே கண்டு கொள்ளாத அமிதாப்பிற்கு முதல் வெற்றி இந்த ஸஞ்ஜீர் தான். மெஹ்ராவும் அட போங்கப்பா என்றார்.காரணம் இந்த ஷோலே சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களைப் பற்றிய கதையாக இருந்தது தான்.ஒதுக்குப்புற கிராமங்களும் குதிரைகளின் குளம்பொலிகளும் கௌபாய் காலத்து லூட்டிங்குகளும் அறுபதுகளிலேயே இந்தி சினிமா நிறையவே பார்த்தாச்சு.மறுபடியும் இதை படமாக்க யாரும் விரும்பவில்லை.ஆனால் ஒரே ஒருத்தர் மட்டும் இந்த ஸ்கிரிப்டில் ஏதோ ஒன்று இருக்கு என நினைத்தார்.அவர் தான் பெரியவர் ஜி.பி.சிப்பி.இந்த அவுட் லைனை கொஞ்சம் டெவலப் பண்ணி கொண்டு வாங்கப்பா என்றார் சிப்பி.சலீம் ஜாவேத் ஜோடி பரபரப்பானது .எப்படியெல்லாம் இந்தக் கதையை மெருகேற்றலாம்.சலீம் ஜாவேத் ஒரு வேலையில் இறங்கிவிட்டால் ஃபயர் தான்.அவர்களது பல படங்கள் பரபரப்பானவை.இந்த ஜோடியின் பல படங்கள் தமிழுக்கு வந்திருக்கு.

மஜ்பூர் நான் வாழ வைப்பேனாக. தீவார் தீயாக சீதா அவுர் கீதா வாணி ராணியாக யாதோங்க் கீ பாரத் நாளை நமதேவாக சச்சா ஜூட்டா நினைத்ததை முடிப்பவனாக சலீம் ஜாவேத் தமிழிலும் பாராட்டைப் பெற்ற ஜோடி.அதே பரபரப்பை இவர்கள் ஷோலே ஸ்கிரிப்டிலும் காட்டினார்கள். 1973 ல் தொடங்கி ஒன்றரை மாதத்தில் மொத்த ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து ஜி.பி.சிப்பியிடம் காட்ட அவருக்கு பரம திருப்தி.அப்படியே தனது வாரிசான ரமேஷ் சிப்பியைக் கூப்பிட்டு கையில் கொடுத்தார். ரமேஷ் மொத்த கதையைப் படித்ததும் பரபரப்பானார்.எவ்வளவு வேணும்?. ஒன்றரை லட்சம் கொடுங்க!. எழுபதுகளில் ஒரு திரைக்கதைக்கு ஒன்றரை லட்சம் கொஞ்சம் ஓவர் தான்.கொடுத்திடுங்க டாடீ!..ரமேஷ் லொகேஷன் பார்க்கக் கிளம்பினார்.பல இடங்கள் தேடி அலைந்தார்.கடைசியில் ஒரு அருமையான லொகேஷன் கிடைத்தது.ராமநாகரா!.பெங்களூருக்கு ஐம்பது மைல் தொலைவில்.

கரடு முரடான காட்டுப் பகுதி. மலைக் குன்றுகளும் வறண்ட மணல் திட்டுகளுமாக இருந்த ராமநாகராவில் மொத்த யூனிட்டும் களமிறங்கியது.சரியான சாலை வசதி இல்லை.மெய்ன் ரோட்டிலிருந்து யூனிட்டே சாலை போட்டது.ஒரு வருஷத்துக்கு இனி இங்கே தான் வேலையே.ஆர்ட் டைரக்டர் ராம் எடக்கர் பக்காவா ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தார்.முப்பது லட்சமாவது ஆகுமுங்க!. இங்கே தான் ஊர் மேடை.அதோ அந்த மலை உச்சியில ஒரு மந்திர்.ஏறிப் போக பக்காவா படிக்கட்டு வேணும்.அந்த மலையில ஒரு பள்ளி வாசல்.பட்ஜெட் எகிரிக் கொண்டே போனது.நூற்றைம்பது பேர் மொத்தமா தங்க ஏற்பாடு செய்யணும்.ராமநாகரா பரபரப்பானது.அதுக்கு இடையில நடிகர்கள் தேர்வு.

சலீம் ஜாவேத் போலவே இரு இணை பிரியா நண்பர்கள்.ஜெய் மற்றும் வீரு.ஜெயில் நண்பர்கள்.இவர்கள் இருவரையும் ஒரு ரிட்டயர்ட் ஆர்மி ஆபீஸர் தனது கிராமத்துக்கு வரவழைக்கிறார்.ஒரு கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தனது கிராமத்தைக் காப்பாற்ற. அப்படியே அகிரோ குரசோவாவின் செவன் சாமுராய்.அதில் ஏழு பேர் இதில் இரண்டே பேர்.சலீம் ஜாவேத் பல வெஸ்டர்ன் படங்களிலிருந்து காட்சிகளைச் சுட்டார்கள். கேரி கூப்பரின் கார்டன் ஆஃப் ஈவில் படத்தில் அதன் நாயகன் எந்த வேலையைச் செய்வதற்கு முன்பும் நாணயத்தைச் சுண்டி விடுவான்.அதே வேலையை இதில் அமிதாப் செய்தார்.இந்த ஜெய் கேரக்டர் அவர் தான்.இந்த கேரக்டருக்கு பலரையும் பார்த்தார் பெரியவர் சிப்பி.சத்ருகன் சின்ஹா தொடங்கி சசி கபூர் வரை.சலீம் கான் விடாப்பிடியாக அமிதாப் தான் செட்டாவார் என்றார்.அந்தப் பையனுக்கு ரசிகர்கள் அவ்வளவு இல்லையேப்பா என்றார் சிப்பி.ஸஞ்சீரில் அபிதாப் நடிப்பு சலீம் ஜாவேத்துக்கு பிடித்துப் போனதால் இந்த ஜெய் கேரக்டருக்கு அமிதாப்பையே ரெகமண்ட் செய்தார்கள்.படம் ரிலீஸ் ஆகட்டும் பாருங்க.அந்த ஜெய் தான் ஜெயிப்பான்.வீருவாக தர்மேந்திரா எந்த பஞ்சாயத்துமில்லை.அவரது ஜோடியா பசந்தியும் பஞ்சாயத்து இல்லை.ஜெய்க்கு யாரைப் 
போடலாம்?.பேசாம ஜெயாவையே போட்டிடலாமே.அய்யய்யோ!. அவ கர்ப்பமா இருக்கா?. அப்போது அமிதாப் ஜெயா திருமணம் முடிந்திருந்தது.ஒரு வேலையும் இல்லை.சும்மா நின்னா போதும் என்றார் ரமேஷ்.அமிதாப் ஓகே சொன்னார்.கப்பர் சிங் தான் இழுத்துக் கொண்டே போனது.

டேனியைக் கூப்பிடு.அவர் ஃபெரோஷ் கானின் தர்மாத்மாவில் பிஸி.ப்ரான் வருவாரா?. அவரு செட்டாகாதுங்க.எங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தரு இருக்காரு. இதோ பாருங்க இவரு தான்!.அம்ஜத் கான் ஃபோட்டோவை சலீம் காட்ட அட என்னப்பா!. முக்கியமான வில்லன் வேஷமாச்சே! யாரு இந்தப் பையன்?? எல்லாம் நம்ம பழைய ஆளு பையன் தான்.எப்படி சொல்றே?.நாங்க கோச்சிங் கொடுக்குறோம்.ஸ்கிரிப்டை சலீம் ஜாவேத் ஜோடி உருதில தான் எழுதியிருந்தாங்க.அம்ஜத் கானும் உருது. தான்.ஆனால் குஜ்ஜார் ஸ்டைல் இருக்கணும்.அந்த கப்பர் சிங்கை வேண்டா வெறுப்பாத் தான் ஓகே சொன்னார் சிப்பி.உண்மையாகவே ஐம்பதுகளில் சம்பல் பள்ளத்தாக்கை மிரட்டிய கப்பர் சிங் குஜ்ஜாரைத் தான் சலீம் ஜாவேத் மனதில் வைத்து எழுதியிருந்தார்கள்.அப்போதே அவன் தலைக்கு ஐம்பது லட்சம் விலை வைத்திருந்தது மத்திய பிரதேச அரசு.அவனை பிடித்தே தீருவேன் என சபதமே போட்டார் அன்றைய ஐ.ஜி. குஷ்ரு ரஷ்டம் ஜீ.சொன்ன மாதிரியே கப்பர் சிங்கை சுட்டுப் பிடித்து பத்ம விபூஷன் பட்டத்தையும் வாங்கினார் ரஷ்டம்.இந்தியாவில் ஒரேயொரு போலீஸூக்கு மட்டுமே கிடைத்த மிகப் பெரிய பட்டமது.அப்படிப்பட்ட கப்பர் சிங்கை அதகளம் செய்தார் அம்ஜத் கான்.

அரே ஓ..சம்பா!.. அழைக்கும்போதே அதிரும். அந்த சம்பாவாக மக் மோகன்.ஐம்பதுகளின் சம்பலை அப்படியே காட்டினார்.இழுத்துக் கட்டிய வேட்டியும் தலையில் முண்டாசுமாக இருந்த ஒரிஜினல் கப்பரை இதில் பார்க்க முடியாது.கரும் பச்சையில் ஒரு கரடு முரடான உடை.பான் போட்டு பழுப்பேறிய பற்கள்.எண்ணெய் பார்த்து நாளான கேசம்.செம டெரர்.இவனால் தனது குடும்பத்தையே இழக்கும் ராணுவ அதிகாரியாக தாகூர் பல்தேவ் சிங் பாத்திரத்துக்கும் பலரையும் பார்த்து வேலையாகாம சஞ்சீவ் கபூரை அழைத்தார்கள்.அந்த தாகூரை அவர் செமையா செய்தார் .ஷோலேவின் வெற்றிக்கு இன்னொரு காரணம் ஆர்.டி.பர்மன்.விறுவிறுப்பான திரைக் கதைக்கு பேக் ரவுண்ட் மியூசிக் பக்க பலம்.பக்காவான பாடல்கள்.பர்மனே பாடிய மெஹ்பூபா மெஹ்பூபா அன்றைய தேதியில் மெகா ஹிட். இவ்வளவு சிறப்புகள் இருந்தும் படம் வெளியானபோது கூட்டமே இல்லையென்பது ஆச்சர்யமான உண்மை.

1975 சுதந்திர தினம் என்பதால் அடுத்த நாள் கூட்டம் அள்ளும் என நினைத்தார்கள்.முதல் நாளை விட மோசம்.அடுத்தடுத்த நாட்கள் அப்படியே நகர அவ்வளவு தான்டா!.. போட்ட முதல் போச்சு.ஒரு வாரம் ரெண்டு வாரம்.விமர்சனங்கள் நெகட்டிவாக வந்தது.ஜெய் கேரக்டரை ஏன்டா சாகடிச்சீங்க.?.ரமேஷ் சிப்பி சோகமானார்.எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தேன்.ஒளிப்பதிவாளர் துவாரகா திவேச்சா புலம்பினார்.அவரு பழைய ஆளு.கர்தாரின் யாஸ்மினுக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் பிலிம்பேர் வாங்கியவர்.சைனா டவுன் சசூரல் என பல வெற்றிப் படங்களுக்கு பணியாற்றியவர்.உழைப்பெல்லாம் வீணாப் போச்சா?.இறுதிக் காட்சியை மாத்தீடலாமா?. பெரியவர் சிப்பி ரெண்டு நாள் பொறுமையா இருக்கலாம் என்றார்.என்ன மாயமோ என்ன மந்திரமோ?.. படம் ஒரு சூடு பிடிச்சது பாருங்க!.. பிய்த்துக் கொண்டு கூட்டம் அள்ளியது.எனக்கு நாலு பிரிண்டு.கல்கத்தா கேட்டது.எனக்கு ஏழு ஹைதராபாத்.தமிழ்நாட்டில் பரபரப்பானது.இந்தியா முழுவதும் ஷோலே பேச்சு தான்.மும்பை மினர்வா நிரம்பி வழிஞ்சது.தொடர்ந்து ஒரு வருஷம் பேய் மாதிரி ஓடியது.ஒரு வெற்றிப் படத்துக்குத் தேவையான அத்தனை கமர்ஷியலும் அப்போது தான் தெரிந்தது.ஆஹா!.. என்ன எடிட்டிங்.ஆஹா!.என்ன கேமிரா ஒர்க்.ஆஹா! எத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு காட்சியும் போரடிக்காமல் தொய்வே இல்லாமல் நகர்ந்த மாயம்.இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு வரும் சினிமா ரசிகனுக்கும் ஷோலே தீனி போடும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை.

Abdul Samath Fayaz

Leave a Reply