• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் இராண்டாவது விமானி மீட்பு

ஈரான் வான்பரப்பில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் இரண்டாவது விமானியையும் அமெரிக்கப் படைகள் அதிரடியாக மீட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில், எதிரிகளிடம் சிக்காமல் இரண்டு நாட்களாகத் தலைமறைவாக இருந்த 'கர்னல்' அந்தஸ்து கொண்ட அந்த விமானியை, பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்கச் சிறப்புப் படைகள் பத்திரமாக மீட்டுள்ளன.

பகல் வெளிச்சத்தில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கையின் போது இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்ததாகவும், எதிரி நாட்டு எல்லைக்குள் ஊடுருவி இந்த "அதிசய மீட்பு" ஆபரேஷனை அமெரிக்கா வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், இந்த இரண்டாவது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் வான் ஆதிக்கம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றொரு அமெரிக்க சி-130 (C-130) ரக விமானத்தை இஸ்பஹான் மாகாணத்தில் தாங்கள் சுட்டுவீழ்த்திவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தோல்வியை மூடிமறைக்க டிரம்ப் முயற்சிப்பதாகக் கூறியுள்ள ஈரான் ஊடகங்கள், வயல்வெளியில் கரும்புகை எழும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. அதேசமயம், குவைத் வான்பரப்பில் ஏ-10 வார்தாக் (A-10 Warthog) ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடனான போர் ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஒருபுறம் அமெரிக்கா தனது விமானிகளை மீட்டதாகக் கொண்டாடினாலும், மறுபுறம் தனது போர் விமானங்களை ஈரான் வீழ்த்துவதாகக் கூறி வருவது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 
 

Leave a Reply