உடற்தகுதி சோதனை - போலியான செய்திகளை நிராகரித்த சரித் அசலங்க
இலங்கை
அண்மைய உடற்தகுதி சோதனையில் தோல்வியடைந்த வீரர்கள் குழுவில் தானும் ஒருவர் என்று கூறும் உள்ளூர் ஊடகச் செய்தியை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க மறுத்துள்ளார்.
தேவையான புள்ளிகளைப் பெற்று சோதனையில் தான் தேர்ச்சி பெற்றதாகக் கூறிய இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர், ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேநேரம், தேவையான உடற்தகுதித் தேவைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பின்னர், ஒரு ஃபிரான்சைஸ் லீக்கில் பங்கேற்பதற்கான தடையில்லாச் சான்றிதழை அசலங்க பெற்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது.
உடற்தகுதி சோதனைகளில் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் வீரர்களின் பட்டியலை ஒரு உள்ளூர் தொலைக்காட்சி வெளியிட்டதைத் தொடர்ந்து, தினேஷ் சந்திமால் உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் அந்தச் செய்தியைப் பகிரங்கமாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















