களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
இலங்கை
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடியில் மட்டு வாவியை கடந்து கிராம குடியிருப்புக்களை அண்டிய பகுதியினூடாக காட்டு யானை ஒன்று வருகை தந்த நிலையில் , இதனை அவதானித்த பிரதேச வாசிகள், வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறான பிரேயத்தனங்களினை முன்னெடுத்து , உயிர் அச்சுறுத்துலுக்கும் மத்தியில் பாதுகாப்பாக யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்ப முயற்சிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும் பொது மக்களும் இளைஞர்களும் தொடர்ச்சியாக அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்து காட்டு யானையை தொந்தரவு செய்ய முயற்சித்ததன் விளைவாக, களுதாவளை தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், ஊடாக குருக்கள் மடம் களப்பு பகுதியினை அண்மித்த பகுதியில் குறித்த யானை தற்போது சஞ்சரித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இதனிடையில் களுவாஞ்சிக்குடி பொலீஸ் நிலைய பொலீஸ் உத்தியோஸ்தர்கள், பொதுமக்களை கட்டுப்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் பணியினை முன்னெடுக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதனால் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















