• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கத்தார் மீது கை வைத்தால் கடுமையாக தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்

இலங்கை

ஈரான் தனது அண்டை நாடான கத்தார் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், ஈரானின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளமன 'தெற்கு பார்ஸ்' (South Pars) பகுதியை அமெரிக்கா முழுமையாகத் தகர்க்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு தளம் மீது இஸ்ரேல் அண்மையில் தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணைகளை ஏவி கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான 'ராஸ் லாஃபான்' (Ras Laffan) மீது தாக்குதல் நடத்தியது.

இதில் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) மையம் பெரும் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கோ அல்லது கத்தாரிற்கோ முன்கூட்டியே தெரியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அப்பாவி நாடான கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார். இனி இஸ்ரேல் அந்த எரிவாயு தளம் மீது தாக்குதல் நடத்தாது.

ஆனால், ஈரான் மீண்டும் கத்தார் மீது கைவைத்தால், இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அமெரிக்கா அந்த ஒட்டுமொத்த தெற்கு பார்ஸ் எரிவாயு தளத்தையும் இதுவரை ஈரான் பார்த்திராத வலிமையுடன் தகர்த்து எறியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு பார்ஸ் இது உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தளமாகும். இதை ஈரானும் கத்தாரும் பகிர்ந்து கொள்கின்றன. ஈரானின் பொருளாதாரத்திற்கு இது ஒரு மிக முக்கியமான முதுகெலும்பாகக் கருதப்படுகிறது.

இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தங்கள் நாட்டின் எரிசக்தி மையங்களைக் குறிவைப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply