ஜன நாயகன் பட மறுதணிக்கை நிறைவு? - தேர்தல் ஆணையம் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரை
சினிமா
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படம் மறுதணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் வெளியாவது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை அடுத்து படக்குழு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது.
இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கான மறு ஆய்வு மும்பையில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என மறு ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது.






















